பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
ரோசலின் என்னிடம் கேட்பாள்
இந்த கர்த்தர் வருசத்துல
ஒருதடவ மட்டும்தான் பொறக்கணுமா,
இன்னொரு தடவகூட பொறந்துருக்கலாம்...

நோன்புக் கஞ்சியை குடித்துவிட்டு
அம்மாவுக்கு எடுத்துட்டு போகக்கூறும்
சமீரா வீட்டுலதான்
ரம்ஜான் விருந்து
எங்க எல்லாருக்கும்...

தீபாவளிப் பட்டாசு
வெடிச்சுட்டு வீடு போற ரோசலினும்,
சமீராவும் அடுத்த
ஒரு வாரத்திற்கு
பட்டாசை
நிரப்பி விடுவார்கள்
வகுப்பறை முழுக்க...

மருத்துவம் படித்த
ரோசலின் அமெரிக்காவிலும்,
சமீரா துபாய்க்கும்
பறந்த பின்னர்
எப்போதும் என்றிருந்த பேச்சு,
எப்பவாவது என்றாகிப் போனாலும்,

எப்போதெல்லாம்
பாங்கொலியும், தேவாலய மணியோசையும் ஒலிக்கிறதோ
அப்போதெல்லாம்
நினைவடுக்கில்
தவறாமல் வந்து போகிறார்கள்
சமீராவும், ரோசலினும்...

இப்படித்தான்
என்னையும்
நினைத்துக் கொண்டிருப்பார்கள்
அவர்களும்
கோவில்
மணியோசையிலும்
பட்டாசுச் சத்தத்திலும்.

- கார்த்திகா

Pin It