குறை மட்டுமே
கண்ணுக்குத் தெரிவது வியாதி
குறைகளைத் தேடி அலைதல் குரூரம்
நியாயமான குறைகளைக்கூட
சொல்லும் முன்
நிறை பற்றி பேசுதல் தான் நாகரீகம்
எல்லாம் தெரிந்தவன் எவனும் இல்லை
எல்லை அறிந்தவன்
முள்ளையும் ரசிப்பான்
முகமற்று முணுமுணுத்தலைவது
ஐயோ பாவம் வேடிக்கை
முந்திக் கொண்டாலும்
காலத்துக்கும் பாயசம் ஆகா
முந்திரிக் கொட்டைகள்
ஆறாங்கிளாஸ்காரன் புத்தி
க் இல்லை என்பதையெல்லாம்
வட்டமிட்டு காட்டுவது
தட்டச்சு தவறுதலால் வந்த பிழையைக்கூட
நோண்டி சாயம் பூசிக் காட்டுவது
சாட்சாத் சாத்தான் வேலை
சுப்புடு ஆவது என்ன அத்தனை சுலபமா
சிப்பாய் வேஷங்களுக்கு
மூடிய உள்ளங்கை பருப்பில்
எத்தனை உண்டென
சொல்லட்டுமே குருட்டுப் பூனைகள்
நல்லூழ் விளையவே இலக்கிய வாசம்
மாறாக மாண்புமிகு அசடுகளுக்கு
சொல்லிக் கொள்வதெல்லாம்
விமர்சித்தல் வேறு
வயித்தெறிச்சல் வேறு

- கவிஜி

Pin It