கட்டணம் செலுத்தியும்
கால்கடுக்க வரிசையில் ஓரிரு நாள் நின்றும்
மின்னஞ்சலில் பதிவு செய்தும்
பாத யாத்திரையில் காலணியின்றி
பலநூறு மைல் கடந்தும்
காத்துக் கிடக்கிறார்கள் தரிசனத்திற்கு..
ஊருக்குள் ஆளரவமின்றி
இரவுபகல் பாராமல்
குப்பைகளை கிளறிக் கொண்டிருக்கும்
பசுக்களின் கொம்புகளில் ஊஞ்சலாடி
எவரும் பிரிக்க முடியாத
நெகிழிக் குப்பைகளை
வாயால் கவ்வியபடி
போராடும் காளைகளின்
முதுகில் ஏறியும்
சீமைக்கருவேலமர புதர்களில்
பாலூட்டும் பன்றிகளின்
மேல் விழுந்து புரண்டும்
அகம்பிறழ்ந்தவன் தாகத்தால்
அள்ளிப் பருகிடும்
உள்ளங்கை சாக்கடை நீரில்
முகம் பார்த்தபடி
தரிசிக்க எவருமற்ற தெருக்களில்
இரவாடிகளின் உணவாக
ருசியாய் கரைந்து கொண்டிருக்கிறது
நிலவு.

- சதீஷ் குமரன்

Pin It