பேரருவியாய் கொட்டும் சொற்களை
பாழும் மனதுள்
எங்கே அடுக்கினாய்

சிரிப்பில்லாத உன் முகத்தை
நான் ஒரு கவிதையிலும்
அடைக்க முடியாது

அன்பின் இறகையெல்லாம்
உதிர்க்கத் தொடங்கினாயோ
தலையுமற்று வாலுமற்று
துடிப்பதென்னவோ நான்

மரண துக்கம் உனக்கு
உன் மௌன துக்கம் எனக்கு

பசி நேரமெல்லாம் இசைக்கத்
தொடங்கி விடுகிறேன்
உன் குறுஞ்செய்தியற்ற குணநலனில்
என்னில் இங்கு யாரோ

பெருவலிக்குள்
உன் சித்திரத்தை களைத்துக் கொள்ளாதே
நீயொரு இரு இதயம் படைத்த
என்னொரு நகல்

இம்சித்தாவது மேலெழுந்து வா
மலை உச்சியில்
தனித்திருப்பது
கவிஜியானாலும் கடினம்

- கவிஜி

Pin It