தவளையின் மைதானம்

நேற்றிரவு மழையில்
குளம் என
நிறைந்திருந்த
கைப்பந்து மைதானம்
இன்று காலை
ஆரவாரமின்றி
தண்ணீரில் தத்தளித்தது
போட்டியின்போது
தவறவிட்ட நுட்பங்கள்
தவளையின் குரல்வளையில் உடைந்துகொண்டு
தண்ணீரில் கரைந்து கொண்டது

மொபைல் நிலா

வெகுநேரமாக
தன் கைபேசியில்
புகைப்படம்
கொண்ட நிலவை
அழகுபடுத்திக் கொண்டிருந்த
வெண்ணிலா
திடீரென வந்த அழைப்பை
ஏற்கும் போது
விடுபட்ட அழைப்பாக
ஒதுங்கிக் கொண்டது
மொபைல் நிலா

அவப்பெயர் சுமந்த பறவை

கத்தி கத்திப் பார்த்தார்கள்
கூப்பிடும் தூரம் வரை
ஒரு காகம் கூட
தென்படவில்லை
வெகுநேரம் கத்திக்கொண்டிருந்த
மைனா படையலின் வடையை
கொத்திக் கொண்டபோது
இறந்துபோன வேலுச்சாமியின்
சொல்லப்படாத வைப்பாட்டி
என்ற பெயர் கொண்டு பறந்தது…. 

- சன்மது

Pin It