தனிமையில்
தனியறையில்
தனித்து விடப்பட்டேன்
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால்

பெற்றவருமில்லை உடன்பிறந்தவருமில்லை
கணவருமில்லை பெற்ற பிள்ளையுமில்லை
என்னருகில் யாருமில்லை
தனிமையில்
தனியறையில்
தனித்துவிடப்பட்ட நான்

முழுஊரடங்கும்
காலவரையறையற்ற விடுமுறையும் அறிவித்தது
தமிழக அரசாங்கம் - ஆனால்
எங்களுக்கில்லை விடுமுறை

ஆறு மாதங்களானது
கொரோனா தமிழகத்திற்குள் குடியேறி
ஆறு மாதங்களாயின
வீட்டிற்குள் நான் குடியேறி

வீட்டைவிட்டு வெளியே வர அஞ்சி
முகக்கவசத்தை உயிர்கவசமாய் அணியும்
மக்களுக்கு மத்தியில்
முந்தானையை முகத்தில் கட்டிக்கொண்டு
கழிவுகளை கைகளால் அள்ளி
காற்றில் கரைந்து போகிறேன்
சம்பள உயர்வை சுட்டிக்காட்டி
வேலை நேரத்தைக் கூட்டி
நேரம் காலம் மறந்து விடிய விடிய
துப்புரவுப் பணி செய்யும் பெருந்துயரத்திற்கு ஆளானேன்

கோடிகணக்கான மக்களை
மென்று விழுங்கிய கொரோனா
என்னையும் விழுங்கிடத் துடித்தது
தாங்கமுடியா அதீத உடல் வலியும் கண் எரிச்சலும்
கூடவே காய்ச்சலும் இருமலும்

சோதனையில்
கொரோனா தொற்று உறுதியானதும்
மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விட்டேன்
அச்சத்தில் அசைவாடியது சில கணங்கள்

அன்று
ஐந்து நாட்கள் வரை
ஒதுங்கியிருந்தேன் மாதவிடாய்க் காலமென்று
இன்று
பதினான்கு நாட்கள் வரை
ஒதுங்கியிருக்கப் போகிறேன்
கொரோனா தொற்றென்று

கொரோனா பரிசளித்துப் போயிருக்கிறது
எனக்கான ஓய்வினை
எனக்கான ஆரோக்கியத்தினை
எனக்கான பாதுகாப்பினை
எனக்கான தனிமையினை

தனித்துவிடப்பட்ட நான்
தனிமையிலில்லை
என் உடல் நலம் பேணுதலை
மீளாய்வு செய்து போகிறேன்

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It