சொல்ல வந்தவையும்
சொல்லி முடித்தவையும்
ஒருபோதும்
ஒன்றாயிருந்ததில்லை

உண்மை ஒன்று
சொல்லப்படும்போது
கலந்து விடுகிற பொய்யை
ஊதி நிரப்பி
தலையணை செய்கிறேன்
ஒவ்வோர் இரவும்

பொய்யோடு கலந்து விடுகிற
உண்மைகள் தான் உண்மையில்
என் உறக்கம் கலைப்பவை

கலப்படப் பொய்கள்
கள்ளச் சாராயம் போன்றவை
நம்பகத்தன்மை கருதி
விரவி விடும் ஒன்றிண்டு உண்மைகள்
புழுக்கம் விதைக்கிற இரவில்
அதன் காதோடு ஓர் உண்மை சொல்லி
உறங்க வைக்கிறேன் ஒவ்வொரு நாளும்

வரலாற்றுப் பாடநூல் விட
வாகாகத் தூங்க வைக்கும்
அந்த உண்மையை
உங்களோடு பகிர்ந்து கொள்ளவதில்
ஒரே ஒரு தடைதான் எனக்கு

நான் சொல்ல வந்தவையும்
சொல்லி முடித்தவையும்
ஒருபோதும் ஒன்றாய் இருந்ததில்லையே

- மைதிலி கஸ்தூரிரெங்கன், புதுக்கோட்டை

Pin It