பெருந்துயர்களைத் தள்ளி வைக்கிறேன்
பெருண்மைகள் பற்றி
கவலைப்பட என்ன இருக்கிறது
கவிதை வரியென கட்டுக் கட்டாக
புலம்பித் தவிக்கும் சிலாக்கி பற்றி
கவலையில்லை
ஸூமில் யாரையோ தூக்கம் வராதவரைப்
பேச விட்டு
நம்மைக் கதற விடுதல் தனித்த சேதம் தான்
எனினும் நம்பிக்கையோடு ஓடி ஒளிகிறேன்
நண்பர்களின்
குறுஞ்செய்திகள்
தோழிகளின் குறும்பு செய்திகள்
பற்றில்லா தொடு திரையில்
முன்னும் பின்னும் அல்லாடுதல்
பட்டம் விடுவது போல சுலபமல்ல
நேர்த்தியற்ற டே யின் டெலீட்டுகள்
ஒருபோதும் ரீ சைக்கிலுக்குள் போவதில்லை
வெற்று நம்பிக்கையின் பால்
நெடுந்தூரம் வந்த பிறகு
கேட்பதெல்லாம்
ஒரே ஒரு குளிர்ச்சி நீளன்தான்
மல்லையாவை திட்டித் தீர்த்தல் பற்றி
பிறகு பேசுவோம்
அவனின் மகத்தான கண்டுபிடிப்பைக்
கனவு காண்கிறேன்
பீர் மரம் மொட்டை மாடியில் முளைத்திருக்கிறது

- யுத்தன்

Pin It