சாமிக்குத்தம் பரவாயில்லை
பசியாற்று வீதிப் பிள்ளைகளுக்கு
பிறகு படையலிடலாம்

*
பாலம் கடந்த ரயிலுக்கு
காலம் கடந்த சத்தம்

*
வந்து அமர்ந்த காகத்துள்
வராமலே அமர்ந்திருந்தது
தூரம்

*
யாருக்காவது தெரியுமா
சத்தமாகக் கேட்கிறேன்
யாவருக்கும் தெரியுமாம்
கிசுகிசுக்கிறார்கள்

*
"மரையே மரையே"
மைவிழி கலைந்த தவளைக்கு
குரல் தான் அப்படி

*
சத்தம் வந்த திசையைக்
காண்கிறேன்
மௌனமும் வருகிறது

*
தூங்குவதாக கற்பனை
செய்வதை விட
தூங்குவது ஒன்றும் அற்புதம் அல்ல

*
கதவடைத்தேன் ஜன்னலடைத்தேன்
வீட்டையே அடைத்தேன்
உலகம் ஓட்டை எப்படி அடைக்க

*
ஊருக்குள் புகுந்த
யானைக்குள்
ஊரும் புகுந்திருந்தது

*
விஷம் கக்கும் கோப்பை பற்றி அல்ல
முத்தம் துப்பும் இதழ் பற்றி தான்
இவ்விரவு

- கவிஜி

Pin It