உங்களிடம்
உடையும்
விரக்தியில் உழலும்
புகலிடம் தேடிவரும்
மனிதர்களின்
கைகளைப் பற்றிக் கொள்ளுங்கள்
அரவணைப்பின் சூட்டைப்
பரிசளியுங்கள்
உடையும் வார்த்தைகளை
நிதானித்து கேளுங்கள் - உங்கள்
இதயத்தினை திறந்து வையுங்கள்
பெருங்கடலில் இருந்தும்
ஓடும் ஆற்றில் இருந்தும்
காலத்தினால் அடித்து
உங்களிடம் வந்திருக்கும்
வற்றிய குளத்து மீன்கள் அவர்கள்
அனுதினமும் மூச்சிரைத்து
சூட்டினால் வெந்து
தப்பித்தலுக்கு
காத்திருக்கும்
மீனின் வானைப் பிளந்து
உங்களைக் கொண்டு
நிரப்புங்கள்
பின் இயல்பாய்
தாமரைகளைக் கொண்டு
குளம் தன்னை
நிரப்பிக் கொள்ளும்
மீன்கள் தங்கள்
செதில்களுக்கு நீரூட்டி
தன்னை உயிர்ப்பித்துக்
கொள்ளும்
பெருவெளியில்
நீந்தித் திரிந்து
பொன்னிற மீன்களாக
உருமாறும்
உடனே நீங்கள்
செய்ய வேண்டியது
எதிர்ப்படும்
எளியவரைக் கண்டு
புன்னகையுங்கள்

- பிரியங்கா

Pin It