காட்டழிச்சி மரத்த வெட்டி
மண்ணக் கொத்தி மட்டந்தட்டி
நேக்கடிச்சி குழியெடுத்து
நாத்து நட்டோமே
தேயில நாத்த நட்டோமே!

வந்தடிச்ச மழையிலே
வளந்துநின்ன செடியத்தா
மட்டம் ஒடிச்சோமே
ஒரே மட்டமா ஒடிச்சோமே!

பூச்சிவந்து தின்னாம
புழு வந்து அண்டாம
இருக்க மருந்தடிச்சோமே
பூச்சி மருந்தடிச்சோமே!

மருந்த குடிச்ச தெம்புலெ
மண்ணுல போட்ட ஒரத்துல
வளர்ந்து நின்னதே
கிளை பரப்பி வளந்து நின்னதே!

மழையில ஏழு நாளு
வெயிலுல பத்து நாளுனு
கொழுந்தெடுத்தோமே! நாங்க
கொழுந்தெடுத்தோமே!

காம்பு ஈர காயுமுன்னே
சுருட்ட புழு சேருமுன்னே
மருந்தடிச்சோமே
தவறாமே மருந்தடிச்சோமே!

மருந்தடிச்சும் ஒரம்போட்டும்
அரும்பொன்னு வெடிக்கலேனு
காத்திருந்தோமே! நாங்க
பாத்திருந்தோமே!

தரையிலெ களையிருக்க
செடியிலெ எலையிருக்க
அரும்பக் காணோமே!
அரும்பு அரும்பக் காணோமே!

களையெடுக்க கஷ்டப்பட்டு
கொழுந்தில்லாம நஷ்டப்பட்டு
மருந்தடிச்சோமே!
களைக்கொல்லி மருந்தடிச்சோமே!

களையெல்லா கருகிப்போக
புல்லெல்லா பொசுங்கிப்போக
வறண்டு போனதே
மண்ணே வறண்டு போனதே!

இத்தனையும் செஞ்சுவைக்க
மழையும் வந்துநிக்க
கொழுந்து வந்ததே
நல்ல கொழுந்தா வந்ததே!

கொழுந்து வார வேளையிலே
நல்ல கொழுந்தா வார வேளையில
வெலயக் காணோமே
தகுந்த வெலையக் காணோமே!

வெலையில்லா வேதனையில
வேலையில்லா சோதனையில
மருந்தக் குடிச்சோமே!
பூச்சி மருந்தக் குடிச்சோமே!

உடம்பு வலிய போக்குறது
மருந்துனு சொன்னாங்க
எங்க உயிர்வலிய போக்குனதும்
மருந்துனு சொல்றாங்க!

காட்டழிச்சி
மரத்த வெட்டி
மண்ணக்கொன்னு
என்னக் கொன்ன
கொழுந்திருக்குதா?
இன்னும் தேயிலக்
கொழுந்திருக்குதா?

- முனைவர் செ.துரைமுருகன்

Pin It