கொடுப்பதை திருப்பிக் கொடுக்கும்
பூமிக்கு சாபமிடுவது
ஆயிரங்கை பேதலிப்பு

நெகிழிப்பைகள்
நுரையீரல் தின்ன
நேற்றைய பைகள் நங்கூரமிடும்

கோவணக் கிழவன் சாமியாடுகிறான்
குறுகிய வயிற்றில்
குறுக்கு நெடுக்கு கோயில் வரிசை

மரங்கொத்திப் பறவையோ
மனம் கொத்திப் பறவையோ
பிழைக்க வழி உண்டா பிதாக்களே

போத்தல் கிழித்த
போக்கிடம் அழித்த
சவக்குழிகளா எம் நிலங்கள்

ஆறடி அல்ல
ஓரடி கூட உடல் கேட்கிறதே
ஈரடிக்கிடையே நன்றி கெட்ட உரம்
மண் புழுவும் மரணிக்கிறதே

சுற்றுலாக்காரன்
விடுமுறையைத் தூக்கி
காட்டில் வீசுகிறான்
பத்தடிக்கு பத்தடி பரிதவிக்கும் களைகள்

வயல் அள்ளியும் விற்கிறான்
வாழ்வள்ளியும் விற்கிறான்
ரியல் எஸ்டேட்காரன் விசித்திரப் பிறவி
நீர் அள்ளியும் விற்கிறான்

நீர் கொண்ட இடமெல்லாம்
கார் கொண்ட கட்டடங்கள்
காட்டுக்கென்ன வேலி
கவிதை சொல்கிறான் மேஸ்திரி

எம்மைக் கொல்லும் எல்லாவற்றுக்கும்
நிலம் கொத்திப் பறவைதான்
எங்கள் அடைமொழி குருத்து
என்ன பார்க்கிறாய்
சரிநிகர் தவறெல்லாம் சுயமற்ற புதிர்தான்

நாள் இறுதியில்
காய்ந்த வரப்பில்
வெறுமனே வந்து போகிறான்
கால் வயிற்றுக்குக் கையேந்தும் கடவுளும்....!

- கவிஜி

Pin It