வெறுப்பை மட்டுமே
நெஞ்சில் நிறைத்த
ஒருவனின் விரல்கள்
திடீரென்று ஒருநாள்
துப்பாக்கித் தோட்டாக்களாக மாறிவிடுகின்றது.

அவன் மலர்விதைகளை
மண்ணில் விதைத்தால்
முட்கள் முளைத்து விடுகிறது.

வெறுப்பு நிறைந்த
ஒருவனின் சுவாசக்காற்றில்
அவனையும் அறியாமல்
விஷவாயு கலந்து விடுகிறது.

அவனின்
நீர்ப்பாய்ச்சல் மிக்க தோட்டங்கள்
குருதிப் பெருக்கெடுத்து ஓடும்
இரத்தச் சகதியாக மாறிவிடுகிறது.

வேறுபாடுகளையும் பிரிவினைகளையும்
வேதங்களாகக் கருதி
பேதங்கள் வளர்ப்பதில் தான்
அரசியல் பிறக்கிறது,
அதிகாரமும் பிறக்கிறது.

அன்பினால் ஆவது ஒன்றுமில்லை.
அதை நட்டக்கணக்கில்
எழுதி வைக்கிறான்
வெறுப்பில் நிறைந்த ஒருவன்.

வெறுப்பின் வேர்களில் இருந்து
வெற்றியின் கூடுகளை
கட்டிக் கொண்ட ஒருவன் வெகுசீக்கிரம்
அதைத் தன் அரண்மனையாக
மாற்றிக் கொள்கிறான்.

பிரித்தாளும்
சூழ்ச்சியை விடவும்
பெரிய தத்துவம்
உலகில் இன்னும்
உருவாக்கப் படவில்லை.

சமத்துவம்
சகோதரத்துவம்
சமநீதி என்பதெல்லாம்
பிழைக்கத் தெரியாதவர்கள்
நமக்கு சொல்லிவிட்டுப் போன
பிழையான தத்துவங்கள்.

சேரியைக் கொளுத்தி
யாகம் வளர்ப்பவர்கள் பின்னால்
மக்கள்
கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்.

கூடிக் கலைவது அன்றி
அவர்களுக்கு
கொள்கை ஏதுமில்லை.

ஆனாலும்
வேல்கம்புகளும்
வெட்டரிவாளும்
வெடிகுண்டுகளும்
கொலைவெறியும்
கூடிக் கலக்கும் ஆயுதங்களால்
போர்த்தந்திரங்களால்
மட்டுமே
மனித குலம்
நெடுநாள்
வாழ இயலவில்லை.

தலை சாய்க்க
ஒரு தாய்மடியும்
புன்னகைக்க
ஒரு மழலை மொழியும்
அன்பினால்
மனம் கசியும்
ஒரு துளிக் கண்ணீரும்
மீண்டும் வேண்டும்.

இல்லையெனில்

பூமி
இனிமேலும்
சுற்றுவதை நிறுத்திக் கொள்ளும்

- அமீர் அப்பாஸ்

Pin It