நல்லவற்றையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
துரோக முடிச்சுகளை இன்னுமேன்அவிழ்க்கிறாய்
என்னைக் களைந்து கொண்டிருக்கிறேன்
அப்பால் செல்
முகமூடி இடையிலிட்ட பெருஞ்சுவர்
அகமூடி இடையிலிட்ட சிறுபாலம்
கல் கடவுளாகிறது
கடவுள் கல்லாகுவதும் தான்
கலக்கும் நதிக்கு
உப்பாகத் தெரிகிறது
கலக்கும் கடலுக்கு
நதியாகவாவது தெரியவில்லை
உதிர்விலும்
பூக்கள் இறப்பதில்லை
நுகர்ந்த மீள் பாதையில்
வாசம் செய்கிறது பார்
தாகமற்ற மீன்
தரையிலா அழமுடியும்
தாகமுள்ள மீன்
கடலில் அழுவதைப் போல
உன்னெதிரில் நீ
நீ நானாகவும்

 

00

விவரிக்க முடியாதபடி
எழுதித் தொலைகின்றன
இந்தப் பூக்கள்
இசையைப்போல இதற்கும்
அர்த்தம் பிடிபடுவதே இல்லை
இருளுக்கு ஒருபோதும்
அச்சமிருப்பதில்லை கூடவே
துணைக்கு நட்சத்திரங்களை
இழுத்து வைத்துக் கொள்கின்றன
நினைவுகளை பொறுக்கி சேகரமானேன்
எத்தனை முறையேனும்
சலித்துப் போகாது
வாழும் சுள்ளிகளால்
கூடும் கட்டுவது இலகு
இடைவெளியை
காலத்தால் நிரப்ப முடியாது
இடறும் போதும்
கற்களை நீக்குவதில்லை நதி
தழுவித் தழுவி வழவழப்பாக்குகிறது
இதயம் என்பது
சொல்ல முடியாத சொல்
மரணத்தை அவிழ்க்க
ஓர் ஆக்கிரமிப்பு வேண்டும்
எரிந்து கொண்டிருக்கிறேன்
கனிதல் எவ்வளவு சுகம்
நீ சுடரா தீயா சொல்

 

00

எழுதிக் கரையாத சொற்கள்
இன்னும் மிச்சமிருக்கின்றன என்னை எழுத
எந்த முகாந்திரமும் அற்று
நுழையும் போதெல்லாம் மனதின் ஏழை வாசலைத் தொடர்கிறது
அஸ்தமனத்தின் சூரியன்
விளக்குகள் எரிந்த வண்ணமே இருக்கின்றன
கண்ணின் மொழிக்கு
சாம்பல் நிறம் தயாரில்லை
புன்னகை கிடைக்கும் போது
உதடுகள் எவ்வளவு
அழகாக வரையப்படுகின்றன
அங்கே நிறங்கள் பேதமடைவதே இல்லை
இரத்தத்தின் சிவப்புக்கு
கருணையாகும் தருணம்
நிறம் வெள்ளை
சுவை அமிர்தம்
அந்த ஒரேயோரு தருணம்
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை

 

00

பேரிரைச்சலில் பறக்கும்
சிபியின் புறாக்கள்
அச்சமுறும் கடல் நூற்றாண்டுத் துயரத்தில் நடுங்குகிறது
படகுகளில் தேங்கிக் கிடக்கிறது சவக்குவியல்கள்
இனவாத புதைகுழிக்குள்
ஊசலாடிய உயிர்களோடு எஞ்சிய எலும்புத்துண்டங்கள்
பத்தாண்டுகளுக்கு முன்னர்
காணாமல் போனவர்கள்
உப்பிய வயிற்றில் மூச்சுத்திணறிய சிசுவின் கண்ணீர்
நிலமற்ற இனமொன்றின் விசும்பல்
மரணங்களால் சிதிலமாகி
சிவந்த மண்
மனித மூளைகளைத் தின்று கொழுத்திருக்கிறது
புலம்பெயர் வேர்களில்
நிர்வாண விஷம்
நடு வீதிகளில்
புலராத விடியல்களின்
சகதி நாற்றம்
புல்லுருவிகளின் வேட்டையில் அரைவேக்காடுகள்
ஊழியின் சமநிலையை
ஊழியே நிச்சயிக்க முடியாது
நிசப்தத்தை ஊடுருவி
தேசத்தின் எல்லைக் கற்களில்
புத்தனும் இறந்திருந்தான்

- தமிழ் உதயா, லண்டன்

Pin It