மேகத்திலிருந்து இறங்கி வந்ததாய்ச் சொன்னாய்.
வெள்ளுடை தரித்து முற்றிலும் நனைந்திருந்தாய்.
பிரத்யேகமாய் உனக்கென வைத்திருந்த பூப்போட்ட
டவல் ஒன்றினால்
துவட்டிக் கொள்ளச் சொன்னேன். பிறகு சிரித்தாய்.
சிரிப்பினூடே கண்கள் கலங்கின உனக்கு.
உனக்கெனத் தேநீர் தயாரிக்கச் சென்ற போது
நான் மட்டும் உறங்கவென இருக்கிற கட்டிலிலிருந்து
தள்ளி வெளியில் இருந்து கற்றையாய் விழுகிற
சூரிய வெளிச்சத்தில் சுவரில் சாய்ந்து
கால்கள் நீட்டி உட்கார்ந்து கொண்டாய்
சில நாட்களாகவே பெருக்கியிராத தரையில்.
பரபரப்பும், பெருவலியும் தெரியும் உன்னை
சூரிய ஒளி மஞ்சள் பழுப்பாய் விளிம்புகள் காட்டிற்று.
துயரங்களை சுமப்பது எல்லோரும்தான்
என்பதை நான் சொல்லவில்லை.
புத்தகம் ஒன்றினை எடுத்து வாசிக்க முயல்கிறேன்.
நீ எழுந்து போயிருக்கலாம் எப்போதேனும்.
புல்லாங்குழலிசையை
மிக நேர்த்தியாக வாசித்துக் கொண்டு
உச்சி வெய்யில் காய்ந்த தெருவில்
சென்று கொண்டிருந்தாள்
கலைக்கூத்தாடிப் பெண்ணொருத்தி.
- ப.மதியழகன் (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கலைக்கூத்தாடிப் பெண்ணொருத்தி
- விவரங்கள்
- ப.மதியழகன்
- பிரிவு: கவிதைகள்