எப்போதும் மனதை
முள்கம்பியாய்க் குத்திக் கிழிப்பதையே
வழக்கமாக்கிக் கொண்டுள்ளாய்.

தவிர
அவ்வாறான தருணங்களிலிருந்து
சட்டென மீளத் துணிகையில்
ஒரு நெருப்புக் கயிறாகி
சூழ்ந்தென்னை இறுக்குகிறாய்.

எப்போதும்போல்
தோல்வியை எனதாக்கி
நினைவுப் பரப்பில்
வெண்காகிதப் பூவாய்ப்
பூத்துச் சிரிக்கிறாய்.
மறுநொடி
செங்காந்தளாய்ச் சீறுகிறாய்.

இதோ
வெம்மை தாளாது பஸ்பமாகி
இப்போது வெளி நிரப்பிக் கொண்டிருக்கும் என்னை
இனி என்னதான் செய்வதாய்
உத்தேசம் உனக்கு?

- வான்மதி செந்தில்வாணன்

Pin It