"ஊரடங்கும் சாமத்துல, நான்…
ஒருத்தி மட்டும் விழிச்சிருந்தேன்
ஊர்க்கோடி ஓரத்தில உன் நெனப்புல படுத்திருந்தேன்
காத்தடிச்சி சலசலக்கும் ஓலையெல்லாம் உன் சிரிப்பு
புரண்டு படுத்தாலும் பாவி மகன் உன் நெனப்பு
பாவி மகன் உன் நெனப்பு"-
ஒரு பெண்ணின் தவிப்புகளை ஒரு ஆண் குரல் முன் வைக்கிறது.... முதல் முறை கேட்கும் போதே.. ஒரு தீர்க்கமான அமைதிக்குள் நான் நுழைந்திருந்தேன்... இந்த முதல் பத்தியிலேயே...என் வீதிகளின் நிறம் மாறத் துவங்கியிருந்தது... "காத்தடிச்சி சலசலக்கும் ஓலையெல்லாம் உன் சிரிப்பு..."இந்த வரியில் மெல்ல புரளத்தான் துவங்குகிறது மனம்.... அது ஒரு ரகசிய ரசனையின் வாய்க்காலை திறந்து விடுகிறது... ஒரு தூரத்து விண்மீனின் ராட்சச கனவுகளை மிகச் சிறிய தூசியாக சுருட்டுகிறது...
"வெள்ளியில தீப்பெட்டியாம்
மச்சானுக்கு வெதவெதமா பீடிக்கட்டாம்
வாங்கிதர ஆச வச்சேன்
காச சுள்ளி வித்து சேர்த்துவச்சேன்..."
அவன் ஆசைப்பட்டதை வாங்கித் தர காசு சேர்த்து வைக்கும் அவளின் ஆசை அத்தனையும் அவன் மாமனாகத்தான் இருக்கிறது... பெண்களின் மனதுக்குள் விழுந்திட்ட விதை ஒரு போதும் முளைக்காமல் இருந்ததில்லை.. அது மிகப் பெரிய விருட்சத்தின் நிழல் களை சுமந்து கொண்டே திரிவதை இந்த வரிகளில்.. நான் கண்டுணர்ந்தேன்...ஒரு பெண்ணின் அந்தரங்க ஆசைகளின் நிலைப்பாட்டில் அவன்... ஆசைகளை தன் ஆசைகளாக சுமக்க முடிவெடுத்த நாளில்.. அவளின்.. அகம்... மெல்ல மயங்குகிறது...அவனுக்கான பீடிக் கட்டாக, தான் இருக்க கூடாதா என்று ஏங்குகிறது...
சம்புகனார் கோயிலுக்கு சூடம் கொளுத்தி வச்சேன்
போரவங்க வாரவங்க
பேச்சையெல்லாம் கேட்டு வச்சேன்
நான் பேச்சையெல்லாம் கேட்டு வச்சேன்....
அவனுக்கு என்ன செய்யலாம்.....ஏது செய்யலாம் என்று கேட்டு கேட்டு செய்யும் பக்குவம் ஒரு வித ஜென் நிலைக்கு அவளைத் தள்ளி விடுகிறது... அல்லது அவளாக ஒரு பெண் நிலைக்குள் தன் குடையை அவனுக்கு மட்டுமே விரிக்கிறாள்... மொத்தமாக... உள் வாங்கும் பொருட்டு.. ஒரு கதவு அவனுக்காக திறந்தே கிடப்பதில் அவளின் அசைவுகளின் சூடம் என்றும் அணைவதேயில்லை...அவள் இன்னுமின்னும் கோயில்கள் கண்டடைவாள்.. அத்தனைக்கும் கொளுத்த சூடம் இல்லாத போது தானே சூடமாகவும் ஆகி விடுவாள் என்று நான் இன்னும் நீண்ட நீட்சியின் நிறத்துக்குள் என்னை அவளாக்கிப் பார்க்கிறேன்...
"ஒரு பாக்கு போட்டாலே
உள் நாக்கு செவந்திடுமே
ஒரு பாக்கு போட்டாலே
உள் நாக்கு செவந்திடுமே
உம்மேல ஏக்கம் வந்து ஏன் தூக்கமெல்லாம்
போச்சு மச்சான்
உம்மேல ஏக்கம் வந்து ஏன் தூக்கமெல்லாம்
போச்சு மச்சான்"
அவனையே நினைத்து... அவனையே விதைத்து.. தூக்கமின்றி தவிக்கும் ஒரு இதயத்தின் குரலில்... ஒரு ஆன்ம நிலை... அத்தனை விதிகளையும் உடைத்தெறிந்து விட்டு.. தன் இருட்டுக்குள் நிலவு செய்து கொண்டிருக்கிறது...ஏக்கம் சிவந்து... தூக்கம்.... இழந்து.. துக்கித்துக் கிடக்கும்... தனிமைக்குள் அவனின்றி அசையாது கிடக்கிறாள்... அவளின்... புரண்டு படுதலில். கசிந்து கிடைக்கும் தலையணைக்கு.... தவம் கலைக்க காலம் வேண்டும்... கூட அவன் காதல் வேண்டும்...
"கழனி சேதுக்குள்ள களையெடுத்து நிக்கையில
உன் சொத்தப்பல்லை போல ஒரு
சோழிய நான் கண்டெடுத்தேன்
கண்டெடுத்த சோழிக்கண்டு கலங்கி நிக்கையில
கலை எடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு ஏசினாரே
கலை எடுப்பு பிந்துதுன்னு பண்ணையாரு ஏசினாரே..."
களை எடுக்கும் வேலை செய்து செய்து கொண்டிருக்கிறாள்.... தன் அவனின் சொத்தப் பல் போல.. ஒரு சோழியை கண்டெடுத்து...ஏதேதோ நினைவுகளுடன் அவள் மெல்ல கலங்கி நிற்கிறாள்.. ஆசை அதிகமானாலும் கலங்கித் தவிக்கும் பெண் மனதின் நிலைக்குள்.. அவளின் கண்ணாடி அவனையே பிம்பமாக்கிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்த போது... களை எடுக்கும் அவள் காலுக்கடியில்.....அழுது கொண்டே ஒரு சிறு பாம்பென நெளிந்தேன்...பண்ணையாருக்கு பயந்த மனதில்... கொஞ்சூண்டு... துனுக்கிடுகிறது... சேர்த்து வைத்த மாமனுக்கான ஆசை..உள் இழுத்து மேல் சென்று மீண்டும் இறங்குகையில்.. குரலின் வரையறைக்குள்... சிறை உடைத்து ததும்புகிறது... தனிமை...
"கருவேலம் முள்ளெடுத்து கள்ளிசெடியிலெல்லாம்
உம்பேர எம்பேர ஒரு சேர எழுதினோமே
ஊருணி கரையோரம் உட்கார்ந்து பேசினோமே
ஊருக்காரன் தலையக்கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே
ஊருக்காரன் தலையக்கண்டு ஓடி நாம ஒளிஞ்சோமே..."
கருவேலம் முள் கொண்டு கள்ளி செடிதில் எழுதிய இருவர் பெயரும்... என்றும் காலத்தை சொட்டிக் கொண்டிருக்கிறது.... அதில்... வடிந்து கொண்டே இருக்கும்.. அந்த பெண்ணின் விசும்பல்களை மிகத் துல்லியமாக நான் சுள்ளிகளைப் போல பொறுக்கிக் கொண்டேன்... அது ஆளில்லா.... அருவிக்குள் ஆழமாய் மூச்சடக்கி கிடப்பதற்கு சமம் என்று நம்பிய பொழுதில்தான்... நான் மீண்டும்.. மீண்டும் முணங்கி தனியாக தவித்து அழுகை அடைக்கித் திரிந்தேன்.. ஆகட்டுமென.. கரையோரம் அமர்ந்து பேசிய அவர்கள் கண்டு விடாமல் தப்பித்து மறைந்து கொள்வதில் ஒரு சில்மிஷ சல்லாபமும் ஒளிந்தே கிடக்கிறது.. அத்தனையும் அவளுக்கு இன்னமும் சிக்காமல் ஒளிந்து கொண்டு திரிவதாகதான் உணர முடிகிறது... தேடித் தவிக்கும்.. கள்ளிசெடி இயல்புக்குள் அவளின் கருவேலம் முள் குத்துவதற்கு பதில்... கத்துகிறது...
"ஊரு என்ன சொன்னாலும்
யாரு வந்து தடுத்தாலும்
உன்னையே சேருவேன்னு துண்டுப்போட்டு
தாண்டுனியே
அந்த வார்தையில நானிருக்கேன்
வாக்கப்பட காத்திருக்கேன்
வார்தையில நானிருக்கேன்
வாக்கப்பட காத்திருக்கேன்"-
ஒரு பிறப்பு.. ஒரு வாழ்க்கை.. ஒரு நினைப்பு......"எப்போ வருவ மாமா.. வாக்கப் பட காத்திருக்கேனு" அவள் நெக்குருகி..... நெஞ்சுருகி.....ஊன் கசிந்து உள்ளம் பிசைந்து காத்திருக்கையில்..... அவன் வருவானா என்று அவளோடு சேர்ந்து இந்த நிலத்தோடு சேர்ந்து.. இந்த நிலைமையோடு சேர்ந்து நானும் எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்...... இனி முடியாத என்ற பொழுதில் உடைந்து அழுதிடும் அவளை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த நான்.. ஓடிச் சென்று ஒரு கவிதை செய்து கொண்டு வருகிறேன்... அது கிழக்கின் கீற்றாக அவளை எழுப்பி விடும் என்பது என் நம்பிக்கை...அவன் கூறிய வாக்கினில் அவள் நிற்கிறாள் ஒரு தவமென...... அவளின் கொக்குகளை அவள்.. கால் மாற்றக் கூட அனுமதிப்பதில்லை... அது அந்தகார சூனியத்தின் நிகழ்வுகளென.. ஒரு வைராக்கிய கனவுக்குள் தன்னிறம் மாறாத பூக்களோடு அவளை இன்றும் நிறுத்திக் கொண்டிருக்கிறது..........
பாடல் எழுதிய பிரளயன் அவர்களின் காலில் விழுந்து வணங்குகிறேன்..பாடிய கிருஷ்ணசாமி அவர்களின் குரலில்.. ஒரு காதல் பிரிந்தே கிடக்கிறது என்பதை புரிகிறேன்...இது வெறும் பாடல் என்று என்னால் கடந்து போக முடியவில்லை... ஒரு வாழ்க்கை..... ஒரு பெண்ணின் தனிமைச் சுடருக்குள் எரியும் கண்ணீர் அசைவு...இந்த ராகம்... குரல் வலையை நெரித்துக் கொண்டே...அழுது தவிக்கும் அகத்தை மனக் கண்ணில் பார்ப்பதாக கசிந்துருகிறது .... இனம் புரியா வலியோடு.. கனவைத் தட்டும் நிறத்தினூடாக சரிந்து விழுகிறது... தேடும் மனம்...
ஒரு வித ஒப்பாரியின் நடுக்கத்தோடுதான் இந்தப் பாடலை நெருங்க முடிகிறது.... தீர்வற்ற தவிப்புக்ளின் சூழலை.. ஒரு காற்றுக்குள் அடைத்துக் கொண்டு...வனாந்திரம் தொலைவதாக நம்புகிற மனதுடன்தான்... மீண்டும் மீண்டும் கேட்க முடிகிறது... அதில்தான்.. பாடலின் ஆன்மா இருப்பதாக மிகத் தீவிரமாக நம்புகிறேன்.. அவளும் அவனும்.... எங்கோ ஒரு தூர தேசத்தில் ஒரு கிராமத்தில் ஒரு குடிசைக்குள் சேர்ந்திருப்பதாக......பாடலை முடித்துக் கொள்கிறேன் ....... பிரித்து வைக்க ஊர்க்காரர்கள் வேண்டவே வேண்டாம்... என்பது.... என் வேண்டுதல்........
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=Xu2bj9OttsQ
- கவிஜி