பட்டப் பாழ்வெளியாகிக் கிடக்கிறது எல்லாம்

(சற்று முன்பு)

அன்பின் எடை கொல்லுமளவு
அதிகமாயிருந்தது

lonely girlகண்களை துடைத்துக் கொண்டு
சொற்கள் தங்கள் கதைகளை
முடித்துக்கொண்டன

நீண்ட நாக்குகள் கொண்ட
வினாக்களின் மத்தியில் நான்
ஈர விழிப் பிதுங்கி நின்றேன்

நெடும் நாள் வளர்ந்த
நம்பிக்கையின் வேர்கள்
தம் நிலப் பற்றை உதிர்க்கத் தயாராயின

என் மெளனம் பாவப்பட்டதாய்
நம் ஒவ்வொரு கண்ணிகளின் உறுதியை
பரிதாபமாகப் பார்த்தது

தன்னறியா அன்புக்கு
ஒரு கொடிய விசமுடைய சோற்றுருண்டை
ஒரே ஒரு பொய்யின் கைகளால்
விழுங்கக் கொடுக்கப்பட்டது

எனது இருப்பு நடுங்கியது

யாரையும் முழுதும் அறிதல் முடியாது
ஆயினும் இது என் இயல்பென
நீ நீயாகவே இருக்க
நான் நானற்றிருந்த காலம்
தொலைதூரத்தின் திடமற்ற கானலென
நினைவெங்கும் நெளிகிறது

...(அதற்கு முன்பு)

நான் உன்னில் என்னளவைத் தாண்டி
ஒரு வண்ண நீரூற்றைப் போல
மீண்டும் மீண்டும் என் வாழ்வால்
நிரம்பிக் கொண்டேயிருந்தேன்
..........
நான் உன்னை
என்னைத் தாண்டி நம்பினேன்
நீயும் உன்னைத் தாண்டி
என்னுள் இருக்கிறாயெனவும் நம்பினேன்
.........................
இனம் புரியாத கொண்டாட்டங்களோடு
நாமுற்ற என் வெளியெங்கும் வசந்தம்
........................................
ஒரு குறுந்தகவல் என சொல்லல் ஆகாது
நிஜமாக நீ காற்றைப் போலதான் வந்தாய்
என் தருணத்தினுள்

அந்த நொடிக்கு முன்பு தான்
நீ நீ
நான் நான்

- முருகன்.சுந்தரபாண்டியன்

Pin It