man lonely 200ஒருமுறை
வீட்டைப் பெருக்கி
பார்க்கிறேன்...
பாதி ஞாபகத்தோடு
பாத்திரம் தேய்த்து
பளிச்சிடுகிறேன்...
துவைத்த துணியோ
எதுவோ மாங்கு மாங்கென
அலசிக் காயப் போடுகிறேன்...
போகிற போக்கில்
எக்கி ஒட்டடை கொஞ்சம்
அடித்து விடுகிறேன்...
தண்ணீர் பிடித்து
தொப்பலாய் நனைகிறேன்....
கலைந்து கிடக்கும் பொருட்களை
அடுக்கி
களைத்துப் பார்க்கிறேன்...
கேஸ் மாட்டத் தெரியாமல்
பக்கத்து வீட்டிடம்
ஜாடை வழிகிறேன்...
இரவுக்கு செய்த
சாப்பாட்டில் அழுது
புரள்கிறது நாக்கு...
புத்தகங்களின் தலை கவிழ்தலை
சரி செய்ய போராடிக்
கிழிகிறேன்....
இருண்ட தனிமையை
இறுக்கிப் பிறழ்கிறது
கெஞ்சும் அணைத்தல்...
யாரிடமும் பேசா சொற்களை
என்னிடமும் பேசி விடாமல்
பெருமூச்சாக்குகிறேன்...

மாதம் ஒரு முறை
அம்மா வீடு சொர்க்கம் உனக்கு
மாதம் ஒரு முறை
அம்மா இல்லாத துக்கம் எனக்கு...

- கவிஜி

Pin It