lady catகிழிக்கப்பட்ட திரைச்சீலையின் பின்னே
திகட்டாத விளையாட்டரங்கம்
எனது படுக்கையறை..
அந்தக்கடுவன் பூனைக்கும் அப்படித்தான்!!

உருட்டியாடிய பாத்திரங்கள்
உடைக்கப்பட்ட பீங்கான்கள்
உறக்கம் தொலைத்த தருணங்களின்
ஓயாத பொழுதுபோக்கு அவன்!

தனிமையின் தாம்பத்யம் பேச்சு!
மொழியறியா நிலப்பரப்பில் என்
கணவனுக்கில்லாத செவிகளும்
கேட்பதற்கான பொறுமையும் அவனுக்கிருந்தது!!

மடியில் கிடந்த கதகதப்பில்
தாய்மையடைந்த என் பருவம்
தரமால் விட்டது அவனுக்கு என்
முலைப்பால் மட்டுமே!

ஒரு மழையிரவு மாலையில் அவன்
வந்தாடிப்போன சாட்சிகளாய்
உதிர்ந்து கிடந்த ரோமங்களினால்
ஆரம்பித்தது முதல் யுத்தம் கணவனால்!

எனக்குக் கூடத்தான் மது வாசம் பிடிக்காது
நிறுத்திவிட்டாரா என் கணவர்?
பதிலெழுதுவும் சொல்லாமல்
மடியில் புதைந்து கொண்டான் அவன்!

ஒரு முன்பகலில் கதைத்துக்கொண்டே
படுத்திருந்தோம் படுக்கையறையில்..
சொல்லாமல் வந்த கணவனின் கோபத்திற்கு
முதல் பலி எனது கன்னங்கள்!!

ஓடி ஒளிந்திருந்தான் அவன்..
ஒரு கோழையைப்போல அல்ல!
நிராயுதபாணியிடம் கை நீட்டிய கணவனை விட
அவனொன்றும் அத்தனை கோழையல்ல..

வெளிச்சம் படரும் வாசலோரம்
நிழல் படர அவன் வரக் காத்திருந்தேன்!!
முன்னறையில் கிடக்கும் கணவனின் நிழல்படம்
வெறி நாயாய்த் தெரிந்திருக்கலாமோ என்னவோ?
கடவுளைப்போல காணாது போயிருந்தான்!!

அப்பாவின் இறப்புக்கு அவசரமாய் கிளம்பியிருந்தேன்
அவரும்தான் இருந்திருந்தார் என்னோடு..
வாசலின் வெளிச்சத்தில் நிழல் படர்ந்தது...
அவன்தான்... காணாமல் போன அவனேதான்!

நெருங்கி வந்தவன் எக்கி மார்போடு நகம் பதித்து
நாவால் நக்கி நின்றான் என் கன்னங்களை!!
அடிக்கப்பட்ட கன்னங்கள் கண்ணீராலும்
அவனது நாவாலும் ஈரமாகியிருந்தன....

தரையிறங்கி முணுமுணுத்தவன்
தனது ரோமங்களைப் பத்திரமாகவும்
எனது கணவனை கவனமாக உதிர்த்தும்
திரும்பிச் சென்றான் வெளிச்சத்தை பாய்ச்சிவிட்டு..

இனியொரு நாளும் வராத சோகமாய்
அவனின் நா முத்தம்
படர்ந்து கொண்டிருந்தது இதயமெங்கும்!!
நகம் பிராண்டி கடித்து விளையாடிய
அந்த கடுவன் பூனையைப் பெற்றிருக்கலாம்
என் மாமியார் என் கணவனுக்குப் பதிலாக!!!!

- சதிஷ் செல்லத்துரை

Pin It