தூங்காத இரவுகளில்
சொல்லப்படாத சில கதைகளும்
கேட்கப்படாத சில கதைகளும்
விழித்தே இருக்கின்றன
இருண்ட இமைகளுக்குள்...
அவ்வப்போது மட்டும்
சிறு வளையமெனத்
தோன்றி மறையும்
கருப்பு வெள்ளைக்
கனவுக் காட்சியின்
ஒரு ஓரத்தில்
தேடித் தேடி அலைகின்றேன்
என்றோ தொலைந்து போன
என் நிழலை...
காட்சியின்
மறு ஓரத்தில்
மிதந்து செல்லும்
வெண்புரவியின் மேல்
அமர்ந்திருப்பது
என் நிழல் அல்ல...
கனவுக் காட்சியின்
ஆளரவமற்ற
இன்னொரு ஓரம்
செதில் செதிலாய்
சிதறிக் கொண்டிருக்கிறது...
ஒரு மரத்தின்
உச்சிக்கிளை நோக்கிக்
கைகள் நீண்டிருந்த ஒருத்தியும்
ரத்தம் தோய்ந்த
கத்தி சுமந்திருந்த
இன்னொருத்தியும்
நீர் நிறக் கூந்தலணிந்த
மற்றொருத்தியும்
எனைப் போலவே
அங்கு
நிழல் தேடிக் கொண்டிருந்தனர்...
கருநிறப் பருந்தொன்றின்
சிறகுகளுக்கடியில்
பதுங்கி இருந்த நிழலொன்றுக்கு
என் விரல்கள் நீள,
எங்கிருந்தோ நீண்ட கையொன்று
இழுத்துக்கொண்டது
அந்த நிழலை...
திசை காட்டும்
கண்ணாடி ஒன்று
என்
நிழல் சென்ற
திசை காட்ட,
என்
பாதங்களோடு பொருந்தக்கூடிய
சுவடுகளைத் தொடர்ந்து
மறைந்து போனேன் நான்...
இருண்ட இமைகளுக்குள்
புகுந்தொளிந்து கொண்ட
சொல்லப்படாத கதைகளும்
கேட்கப்படாத கதைகளும்
இன்னும் விழித்தே இருக்கின்றன
ஒவ்வொரு இரவிலும்...