எப்படி
அத்தனை சுலபமாக
நீயும் உண்ணாமல்
என் தட்டையும் தட்டி விட்டு
வாசலில் இருக்கும்
நாயின் தட்டையும் உதைத்து விட்டு
விருட்டென்று
நடந்து போக முடிகிறது
உன்னால்...
உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை என்ற போதுதான்
"இருந்தது"
ஒன்றுமேயில்லை
என்பது புரிந்தது..
புரிதலின் வீரியம்
வெறும் தட்டா....
உதைபட்ட பிறகு சுவர் தேடி
ஒட்டிக் கொள்ள...
அது தீவிரக்காரனின்
ஆழ் மனப் பிளவு
அங்கிருந்து மூச்சு வாங்கிக்
கொண்டேயிருக்கும்
தெரு நாயின் இரவுப் பசியை
நிரப்ப நீ உதைத்த தட்டால் முடியும்
என்றா நினைக்கிறாய்...!
என்னவோ போ..
கடித்த எறும்பைக்கூட
ஊதிதான் தள்ளி விட முடிகிறது
என்னால்...
- கவிஜி