நாளைய கூகுளில்
போதி மரத்தையும்
தேடுவானோ
ஏதாவது ஒரு புத்தன்?
==
நிழற் புன்னகைகளை
இயக்குகிறான்
புகைப்படக்கலைஞன்
==
எனது சோகக்கீதங்களை
கண்மூடி ரசிக்கும்
பகலவனால்
வானம் இரவானது.
==
நானெழுதிய
கதை திரைக்கதையில்
சிலம்புடைத்தாள்
மாதவி.
==
நவீன சிகையலங்காரத்தின்
முன்மாதிரி
சிலப்பதிகார கண்ணகியா ?
==
தூரிகைக்கு
சொந்தக்காரன் எவரென்று
கவனிப்பதில்லை
சிறந்த ஓவியங்கள்!
==
பூக்களில் தேனுறிய
வண்டுகளுக்கு மட்டுமா
காப்புரிமை?
==
அவளை எனது இதய
கர்ப்பக்கிரகத்தில் பூஜித்தேன்
முடிவில் அவளே
எனக்கு தீர்த்தமானாள்
==
பயணங்களின் முடிவில்
சோம்பல்கள் முக்திப்பெறுகிறது
சிந்தித்த கவிதைகள்
பூப்பெய்துவிடுகிறது.
==
திரையை விலக்கினேன்
நிர்வாணமானது
எனது சாளரம்.
- இரா.சந்தோஷ் குமார், திருப்பூர் - 2