கீற்றில் தேட...

IIayarajaநான் வீட்டிலிருப்பதை
எப்படிக் கண்டுபிடிக்கிறாய் என்ற
ரகசியத்தை யாரும் அறியார்.
காலணிகள், இருசக்கர வாகனம்
இத்யாதி, இத்யாதி என
எத்தனையோ முறை யோசித்தார்கள்.
இளையராஜா பாடலிருந்தால்
நானிருக்கிறேன் என்பதை
கடைசி வரை அறியவில்லை அவர்கள்.

அழுகையில் துவங்கி
அழுகையில்
முடியும் வாழ்க்கை.
இளைப்பாற கொஞ்சம்
இளையராஜா பாடல்கள்.

உன் இசையால்
நனைந்த பிறகே
பல வார்த்தைகள்
குடை பிடிக்கக்
கற்றுக்கொண்டன.

ராஜ சபைகளை விட
இந்த ராஜாவின் சபை தான்
கவிஞர்களின்
காலமாயிருந்தது.

பள்ளிப் பருவத்தில்
உன் பாடல்
கேட்டு அலைந்த
கேசட் கடைகளெல்லாம்
பாடல் பெற்ற தலங்கள் தான்.

புளி ரசம்
அறிந்த தமிழர்களிடம்
ரசனையென்ற
மது ரசம் ஊற்றிக் கொடுத்த
தேன் கிண்ணம் நீ.

இசைத்தட்டுக்குள்
இறங்கும்
ஊசி போல
எனக்குள் இறங்கி விட்டாய்.

கண்ணன் வந்து கேட்கிறான்
கொடுத்து விடாதே
புல்லாங்குழலை.

தெரிந்தே தான்
வைத்துள்ளனர்
உன் பெயரை.
இசைக்கு என்றும்
நீ ராசா தான்யா.

இந்த சேரிக்காரனின்
செருப்பை வைத்தே
பலர்
சிம்மாசனங்களைச் செய்தனர்.

உன் வாய்ப்பாட்டு
எனக்கு வாய்ப்பாடு.