மர்மப் புன்னகை கமழ
ஒரு முரட்டு சுட்டுவிரல்
கொடுத்தது தீர்ப்பு
உரத்த குரல் ஆமோதிக்க
கோமானின்
கண்ணீர்த் துளியை
சுரண்டி எடுத்தது.
கண்காணிப்பு சந்தேகம்
பரிசோதனை அறிக்கை
யாவும் பின்
பின்புலத்தால் மூச்சுத் திணற
ஒரு கமர்ஷியல் பிரேக்
முடிந்து
தொடருக்குத் திரும்பியபோது
நாலாவது வீட்டுவாசலில்
பால் பாக்கெட் வியாபாரியுடன்
நெக்குருகி
பேரம் பேசிக்கொண்டிருந்தது
மேதகு விசாரணை.
கண்கச்சைக் கட்டப்பட்ட
தர்மதேவதைமுன்
அம்முரட்டு சுட்டு விரல்
மினுமினுங்க
நீதிப்பூச்சியின் விரல்களுக்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
குற்றம் சாட்டப்பட்ட கோமானுக்கு
பிணை ஆணை
தட்டச்சு செய்யுமாறு.
- வெ.வெங்கடாசலம்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
நீதிப்பூச்சி
- விவரங்கள்
- வெ.வெங்கடாசலம்
- பிரிவு: கவிதைகள்