கீற்றில் தேட...

moonஇரவின் நீட்டலில் ஒரு வன்புன்னகையுடன்
குவிந்த அவ்வீட்டிற்குள் நுழைகிறான்,
கனவுகளை முட்கள் கொண்டு கிழிப்பவன்..
ஒவ்வொரு கனவுக்குள்ளும் மிக எளிதாக நுழைந்து
செந்நிற சிறகுகளாலான நகங்களை
கனவின் நடுக்கம் கொண்டு கூராக்குகிறான்..
மென்மையான பூவிதழ்களைப் பிய்த்தெடுத்து
போர்த்திக் கொள்ளும் வாகு
அவனுக்கு மிகவும் பிடித்திருக்கலாம்..
வண்ணங்களைக் கீறி சதை உதறும்
முத்தங்களைச் சூறையாடுதல்
அவனுக்கு மிகவும் பிடித்திருக்கலாம்..
வீட்டின் காற்று புகமுடியா அறையில்
வெளிர்கூந்தலை விரித்து
சிக்காக்கிக் கொண்டிருக்கிறாள் நிலவதனி..
அவளைக் கண்டதும் தன்னிலை விளக்கிச்
சிறகுகள் அடர்ந்த கனவின் வனத்தில்
அவளுடன் சுற்றித் திரிய துவங்குகிறான்..
வன்மத்தின் ஆதி வினா கனவுகளா? உறக்கங்களா? என
குளிர் மரங்களின் கிளைகளில்
அமர்ந்து குரூர புன்னகை இழைந்தோட
விவாதிக்கிறார்கள்..
வருடங்களில் வயதுகள் குறைந்து
விவாதத்தின் இரட்டை நாக்கைப் பற்றி
காலம் தாண்டி பயணிக்கிறார்கள்..
காலங்கள் கடந்து வனத்தின்
எல்லைகளைக் கடந்ததும்,
பற்கள் பதித்து கிழித்தெறியும் வெறியுடன்
சிதறுண்டு தள்ளாடும் அவனுள் விடம் ஏற்றி
நகைத்து நிற்கிறாள் நிலவதனி..

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]