காமம் கழித்த பின்னிரவில்
உனக்கான நியாயங்களை
முன்வைக்கத் தொடங்கியிருந்தாய்
நீண்டதொரு காத்திருப்பிற்குப் பின் வழியும்
வார்த்தைகளில் ரத்த வாடை
கூந்தல் அள்ளி முடிகையில்
நடு முதுகு மச்சம்
இட்டுவைத்த முத்தப்புள்ளி
பின்னங் காதோரப் பூனைமுடிச் சுனையுள்
சிக்கித் தவிக்கிறது ஆதி சுவாசம்
திரும்ப மறுக்கும் கழுத்தில் பதித்த பல் தடத்தை
என்ன செய்யப் போகிறாய்
நிமிடமுள் உடைக்கும் தர்க்க வாதங்கள் முறி
முயங்கு
பின்
அபத்த நிறம் பூசிக் கிழிந்த முகமூடியை வீசி
வா
முத்தமிடுகிறேன்
- ப்ரீத்தி ஸ்ரீதரன்