கீற்றில் தேட...

mother child 350அம்மாகுட்டிக்குச்
சோறூட்டும் மதிய நேரத்தில்
இடுப்புயர மதில்சுவற்றில்
சரியாக வந்தமர்கின்றன
சில காகங்கள்

காகத்திற்கு கொடுத்துவிடுவதாக
ஏய்ப்புக் காட்டி
ஊட்டும் சமயங்களில்
காகம் ஏமாந்து போய்விடுமென
மீதிச் சோற்றை
மதிலில் வைக்க எத்தனிக்க
கையிலேயே வந்து
கொத்தித் தின்கின்றன
பசியுற்ற காக்கைகள்

இப்பெருநகரில்
எப்படி பசியாறுகின்றன காக்கைகள்
எனும் கேள்வியுடன் கதவடைக்கிறேன்
சமையலறைச் சன்னலில்
அடைக்கப்பட்ட கொசுவலையைக்
கொத்திக் கொண்டிருந்த காகம்
திடுமெனப் பறந்து
பக்கத்துவீட்டு தென்னை மரத்திலிருந்து
நோக்கியது
இடுப்பிலிருந்த குழந்தை
கைதட்டிச் சிரிக்கிறது..

இப்போதெல்லாம்
தனக்கு ஊட்டும்போது
காகத்துக்கும் வைத்தால்தான்
சாப்பிடுவேன் என
அடம்பிடிக்கிறது குழந்தை
காகம் குழந்தையிடம்
தன் குறை சொல்லியிருக்கலாம்

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)