கீற்றில் தேட...

man 304எனக்கு இந்த முகம் வேண்டாம் தோழர்களே
மற்றவர்கள் வெறுப்புடன் பார்க்காத
ஒரு முகம் வேண்டும்
உருண்டைவடிவம் செவ்விதழ் கூர்நாசி கொண்டது
கறுப்புதான் என்றாலும் களையான முகம்தான் எனது
அந்த முகத்துமேல் இருபிறப்பாளார்களால் பூசப்பட்டுள்ள
அரிதாரத்தின் பொருள் இருக்கிறதே
அதைத்தான் நான் மலையளவு வெறுக்கிறேன்
மற்றவர்களால்
அருவருப்பாய் பார்க்கப்படுகிறது என் முகம்
இழிவுபடுத்தப்படுகிறது
துச்சமாய் நினைக்கப்படுகிறது
ஒதுக்கி வைக்கப்படுகிறது
ஒடுக்கப்படுகிறது
நசுக்கப்படுகிறது
அடித்து நொறுக்கப்படுகிறது
எனவே என் முகம் வாடி வதங்கி
மேலும் கறுத்து ஓவென்று அழுது வடிகிறது இப்போது
உங்களிடம் சொல்வதற்கு என்ன
சில சமயங்களில் என் முகத்துமேல்
நானே காரி உமிழ்ந்துகொள்கிறேன்
என் முகத்தைக் கழற்றி எறிந்துவிட்டு
அமெரிக்கனின் சீனாக்காரனின் முகம் வரைந்துகொள்ள ஆசை
என் முகத்தின் பரிணாமம்
அதன் வரலாறு அழகு அம்சங்களால் நிறைந்ததுவாம்
சொல்கிறார்கள் அறிவாளிகளும் என் மூதாதையரும்
கேட்பதற்கு பெருமிதமாக இருக்கிறதுதான்
பெருமிதத்தை வைத்துக்கொண்டு நாக்கு வழிக்கவா
பார்த்த மாத்திரத்தில் மற்றவர்கள் புன்முறுவல் செய்து மதிப்பளிக்கும்
ஒரு முகத்தேடலுக்கான போராட்டம்
என்றாகிவிட்டது எனது வாழ்க்கை
இக்கவிதை மூலம் உங்களுக்கு நான்
அடித்துச் சொல்ல விரும்புவது என்னவென்றால் கேளுங்கள்
எனக்கு இந்த முகம் வேண்டாம் அவ்வளவுதான்.

- வெ.வெங்கடாசலம்