கீற்றில் தேட...

baby 150நிவிக்குட்டி
சொற்களைக்
கையாளத் துவங்கிவிட்டாள்
ஓரெழுத்தாக
ஈரெழுத்தாக
ஓரிரு எழுத்துக்களாக
புதிய சொற்களை
உருவாக்கிப் பரப்பிவிடுகிறாள்

அறை
வீடு
வாசல்
தெருகடந்து
கண் முளைத்து
கால் முளைத்து
காற்றில் கலந்து
அலுவலகத்திலிருக்கும்
அவள் அம்மாவின்
ஆரிக்கிள்களையும்
வெண்ட்ரிக்கிள்களையும்
தட்டித் திரும்புகின்றன..

அலுவலகத்திலிருந்து
திரும்பும் வழியில்
இறைந்துகிடக்கும்
நிவிக்குட்டியின் சொற்களைப்
பொறுக்கிக் கொண்டுவந்து
வீடு சேர்த்து
நிவியின் முன்னால் பரப்புகிறாள்

குவிந்திருந்த சொற்களைப்
புறந்தள்ளும் குழந்தை
’அம்மா’ எனக் கையை
உயர்த்தித் தூக்கச் சொல்லி சிணுங்குகிறது.

அம்மா கையிலிருந்த
சொற்களைக் கைகழுவிட்டு
வந்து தூங்குவதற்குள்
தொடர்ந்து ‘அம்மா அம்மா’ என
அழத்துவங்க
அச்சொற்கள்
கைகழுவிக் கொண்டிருந்த
அம்மாவின் கைகள்வழி நீராகப்பரவி
உடலெங்கும் பற்றியெரியச் செய்கிறது
பரிதவிப்பை

- இவள் பாரதி