தேவையான இடைவெளிக்குப் பிறகு
புதுப்பிக்க வேண்டியிருக்கிறது
மனித உறவுகளை.
ஒரு சிறிய பேச்சுவார்த்தையால்
ஒரு புன்சிரிப்பால்
சிறிய தலையாட்டல்களால்
செய்யாத தவறிற்கு மன்னிப்பு கேட்டு
புகழுரை கலக்கா உண்மையால்
பல சமயங்களில் பொய்யாகச் சிரித்து
தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது
புதுப் புது யுக்திகள்.
அலுவலகத்தில் இருந்து
எரிச்சலுடன் திரும்பி வரும்
என் மகனிற்குத் தேவைப்படுகிறது
ஒரு சிறிய மௌனம்
அடுத்த நாள் அவன் அலுவலகம்
செல்லும் வரை.
நீண்ட இடைவெளிகளை
நிரப்பிக் கொண்டுதான் இருக்கிறது
வேண்டுமளவு மௌனம்
மிகவும் சப்தமாக பல சமயங்களில்.
- பிரேம பிரபா