வெட்ட
வெட்ட
துளிர்க்கிறது
பென்சில்
-----
அண்ணனும்
நானும்
ஆனந்தக் கூத்தாடிய
பண்டிகை நாளில்
அம்மா மட்டுமே கவனித்திருப்பாள்
கடிகாரமிழந்த
அப்பாவின் வெறுங்கையை.
-----
அடி வாங்கிச் செத்து
ஆறு நாள் பின்னரும்
எங்கள் நாவுகள் வழியே
ஓடிக்கிடக்கிறது
பாம்பு.
----
இளநீர்க்காரனுக்கும்
வியர்வையொழுக
காலி மட்டைகளை
அவனுக்கு முன்பாய் வீசியெறிய
கடினமாகத்தானுள்ளது.
கீற்றில் தேட...
அப்பாவின் வெறுங்கை
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்