கீற்றில் தேட...

எப்பொழுதும்
காதுகளின் தோட்டத்தில்
ரீங்காரமிட்டபடி சொற்கள்

சொற்களின்
இசைகேட்டபடி
வயிறுநிறையும் காதுகள்
இங்கு சொற்கள்
உறிஞ்சுவதில்லை
ஊட்டுகின்றன.

சொற்களின்
சிறப்பு விருந்துகளில்
பரிமாறப்படுவன
கிசுகிசுக்களே

இந்த சொற்கள்
விசித்திரமானவை
தன் நிர்வாணம் அறியாமல்
அடுத்தவர்களின்
ஆடைக்குறைப்புக்கு
அவதூறு பேசும்

சக மனிதர்களின்
அந்தரங்கத் தேமலின்
அழகின்மையை விமர்சிக்கும்
தன் மேனியின் படைகளைச்
சொறிந்தபடி

எதிரில் கண்ணாடியே
இருந்தாலும்
கைநீட்டி ஏளனம் செய்யும்
பிம்பம் தானென்று அறியாமல்

இந்த சொற்களின்
கல்லறைகளிலும்
செவிகளே
நித்திய கல்யாணிகளாய்ப்
பூத்திருக்கும்.

- முனைவர் நா.இளங்கோ