கொடிதினும் கொடிதாம் வேலை யில்லா
அடிமைத் தனத்தை ஒழிக்கும் சமதர்ம
அரசை நிறுவ எண்ணிய காலை
கரவிலா அறிஞர் புவிவெப்ப உயர்வைத்
தடுப்ப தன்றித் திருப்பவும் செய்யும்
நெடுந்தொலை ஆற்றல் உடையதே அதுவென
உணர்த்தும் நிலையில் வினைஞரும் அறிஞரும்
இணக்கம் காண்பது நன்றே அன்றோ?
(கொடிதினும் கொடிதாம் வேலையில்லா அடிமைத்தனத்தை ஒழிக்கும் சமதர்ம அரசை நிறுவ எண்ணிய போது, புவி வெப்ப உயர்வைத் தடுப்பது மட்டுமல்லாமல் (ஏற்கனவே உயர்ந்துள்ள வெப்பத்தைக் குறைக்கும்படி) திருப்பிவிடவும் வல்ல நெடிய உள்ளாற்றலைக் கொண்டது தான் சமதர்ம அமைப்பு என்று கள்ளங் கபடமற்ற அறிவியல் அறிஞர்கள் உணர்த்தும் நிலையில் உழைக்கும் மக்களும் அறிவியல் அறிஞர்களும் இணக்கத்துடன் ஒன்று சேர்ந்து போராடுவது நல்லது அல்லவா?)
- இராமியா