இந்த ஆகாயம் நமக்கானது
எனினும் நாம் அதனால் கைவிடப்பட்டவர்களாக இருக்கின்றோம்
வீண் ஒப்பீடுகளில் வாழ்க்கையின் காலிக்கோப்பைகள்
என்றுமே நிறைவதில்லை
அன்பும் அரவணைப்பும் அதன் அடித்தளங்களாவன
ஒரு சிட்டுக்குருவிக்கிருக்கும் அக்கறை கூட நம்மிடமில்லாதது
நம் பிள்ளைகளுக்கு நம்மால் விதிக்கப்பட்ட கொடுஞ்சாபம்
பொய்யான
போலியான
கோபத்துடன் இன்னும் எத்தனைநாள் என்னிடமிருந்து
விலகி விலகி உன்னால் செல்லமுடியுமென்று
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
வண்ணமயமான வானவில் விரைவில்
தவத்தைக் கலைத்து முடிப்பதற்குள்
சிறுமுத்தம்
குறுஞ்சிரிப்பு
மெல்லிய புன்னகை
ஒரு கடைக்கண்பார்வை
சின்னஞ்சிறு தலையசைப்பு
எதையேனும் ஒன்றைத்தந்து
சுற்றிச்சூழ்ந்து நிற்கும் நிறைமாத மேகத்திற்கு
நீ காட்டப் போகும் கருணையினால்
வறண்டுக்கிடக்கும் நம் பாலைவனப் பூமியில்
பெய்யெனப் பெய்யும்
காதல்.
- அமுதாராம்