உங்களிடமிருந்து
விடைபெற்றுக்கொள்கிறேன்
வெளியேற்றப்படுவதை விட
வெளியேறுவதிலேயே
சம்மதமெனக்கு
எப்போதிருந்து
உங்களைவிட்டு
விலக ஆரம்பித்தேனென்பது
நினைவிலில்லை
எங்கிருந்து விரல்பற்றினேன்
என்பது நினைவிலில்லாததைப் போல
இருப்பதிலும்
வெளியேறுவதிலும்
பெரிதாய்யென்ன
இருந்துவிடப்போகிறது
இருந்து.....வெளியேறியதைத் தவிர
உங்களுக்கும்
எனக்குமான இடைவெளிகளின்
நீள அகலங்கள் குறித்து
இத்தருணத்தில்
பேசிக்கொண்டிருக்கத் தேவையில்லை
சந்திப்பின்
கடைசி நிமிடங்களில்
பொய்யாய் சிரித்தாவது
கைகுலுக்கிக் கொள்வோம்
என் விடைபெறலில்
ஆட்சேபணைகள் எதுவும்
உங்களுக்கில்லையென்று தெரியும்
இதுவரை இருந்ததில்
ஆட்சேபங்கள் இல்லாதிருந்தால்
போதுமெனக்கு
காற்று
சிறகுகள்
வானமென்று
தூரமாய் போக வேண்டியிருக்கிறது
விடைகொடுங்கள்......
- இரமணிஷர்மா