ஆதி யோனியிலிருந்து தருவிக்கப்பட்ட பிண்டம்
மொழியறியா காலத்தில்
வாய் திறந்து சொன்ன முதல் வார்த்தை
உன் சாதியின் பெயரெனச் சொல்
பேச்சரவம் கேட்காத காடுகள் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருக்க
குதிரைக்கும் மீனுக்கும் பிறந்த ஒருவன்
உன் சாதிப்பெயரை சொன்னான் என்று சொல்
சிறகு முளைத்த பறவைகள்
அந்த சொல்லை விழுங்கி காலத்தை
பிரசவித்ததென்று புராணம் பேசு
கடவுள் தன்னை கடவுளென்று அறிவித்தவுடன்
கையெழுத்திட்ட முதல் சாசனம்
உன் சாதிப்பெருமையென்று பறை சாற்று
ஐன்ஸ்டீனும் காரல் மார்க்ஸும் உன் சாதியில் பிறந்தவர்கள்தான்
அய்ரோப்பாவிற்கு கடத்திக்கொண்டு போய்விட்டதாகப் புகாரளி
சேரன் சோழன் பாண்டியன் இன்னும் பல்லவன்
எல்லோரும் பிறந்த யோனி
உன் சாதியினுடையதென்று உரக்கச் சொல்
உன்னிடம் சாதியின் வாள் இருக்கிறது
உன் சாதிப்பெண் காதலிக்கிறாளாவென கண்காணி
காதலித்தால் பல்லை நறநறவென கடி
அவளை காதலனிடமிருந்து கடத்து
அன்பாகப் பேசி அழைத்து
அவள் மீது பெட்ரோலை ஊற்று
அல்லது வாகனம் மோதி சாகச் செய்
பட்டினி போடு நிர்வாணமாக்கு
பைத்தியமென்று ஊரை நம்பச் செய்
உயிரோடு கொன்று புதை
சாதி வெறியைத் தூண்டு நிலத்தைத் துண்டாடு
ஊர்களை சாம்பலாக்கு
எல்லாவற்றுக்கும் நீ போக வேண்டாம்
உன் பேச்சை அனுப்பு
பெரிய வன்முறைகள்
சிறிய பேச்சிலிருந்துதான் தொடங்குகின்றன.
கீற்றில் தேட...
பெருமை பேசும் ஆதி வாய்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்