நுகர்வின்பம் தன்னை விடுதலை உணர்வெனத்
தகவில எண்ணிப் பெயர்ந்த நண்பா
சூறா வளியின் சீற்றம் தன்னில்
ஆறா வடுவை ஏற்ற தின்பமோ?
இடர்மிகு நிலையிலும் சுடர்மிகு திறனுடன்
உடன்பிறப் பல்லா வளர்ப்பு உயிரையும்
காத்திட்ட அரசின் வலிமை கூட்டி
ஏத்துதல் தானே முழுமை இன்பம்?

         (நுகர்வு இன்பத்தைச் சுதந்திர உணர்வு என்று தவறான கருத்தை நம்பி (கியூபாவை விட்டு அமெரிக்க ஐக்கிய நாட்டில்) குடியேறிய நண்பனே! சூறாவளி சீற்றத்துடன் தாக்கிய போது அதைச் சமாளிக்க முடியாமல் (அமெரிக்க ஐக்கிய நாடு) ஆயிரக் கணக்கான மக்களைக் காவு கொடுத்ததே! அது தான் இன்பமா? பல இடர்களைச் சந்தித்துக் கொண்டு இருந்தாலும் சுடர் விட்டு ஒளிரும் திறனுடன், (அதே சூறாவளியில் இருந்து) உடன் பிறப்புகளான மனிதர்களை மட்டுமல்லாது, வளர்ப்புப் பிராணிகளையும் பாதுகாத்த (சோஷலிச) அரசின் வலிமையைக் கூட்டி அதை ஏற்றி வைத்தல் (அதன் மூலம் அனைவரும் அனைத்து நலன்களையும் அடைதல்) தானே முழு இன்பம்?

- இராமியா