சாதிக் கொடுமையின் வேராம் பார்ப்பன
ஆதிக்க ஒழிப்பை நிறைவேற் றாமல்
வினைஞர் புரட்சிக்கு முயல்வ தென்பது
சினையே கொள்ளாது தடுக்கும் சூழ்ச்சியே
போலிப் புரட்சியில் முதலியை ஒழிப்பின்
மேலிடம் தன்னைத் தமதாய்க் கொண்டு
மற்றவர் களுக்கு அவரவர் வருணம்
உற்ற வேலை அளித்து அதனில்
வேலை யில்லை என்ப தில்லை
சாலவும் சிறந்த சமதர்மம் இதுவென
துணிந்தே கூறி ஏய்ப்பார் பார்ப்பனர்
(சாதிக் கொடுமைகளுக்கு வேர் பார்ப்பன ஆதிக்கமே. பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்காமல் தொழிலாளர் புரட்சிக்கு முயல்வது என்பது (அப்புரட்சி) கருக் கொண்டும் விடக் கூடாது என்று தடுப்பதற்கான சூழ்ச்சியே. (பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்காமல்) போலியான புரட்சியை முன்னெடுத்து முதலாளிகளை ஒழித்தால் (அதன் பிறகு அமையும் சமூகத்தில், அதிகாரம் கொண்ட) உயர்நிலை வேலைகளை எல்லாம் பார்ப்பனர்கள் தம் வசம் வைத்துக் கொண்டு, மற்ற மக்களுக்கு அவரவர் வருணத்தின் படி வேலைகளை அளித்துவிட்டு (அதாவது பழைய வருணாசிரம சமுதாயத்தை அமைத்துவிட்டு) வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை என்பதால் இது தான் சோஷலிச சமுதாயம் என்று துணிந்து கூறி நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றுவார்கள்.)
- இராமியா