கீற்றில் தேட...

வாங்க தல,
உக்காருங்க..,அப்புறம்...

தலித்தியம் தெரியுமோ?

தெரியாது.

பெரியாரியம் தெரியுமோ?

தெரியாது.

திராவிடம் தெரியுமோ?

தெரியாது.

தமிழ்த் தேசியம் தெரியுமோ?

தெரியாது.

மார்க்சியம் தெரியுமோ?

தெரியாது.

பொதுவுடைமை தெரியுமோ?

தெரியாது.

ஒன்னுமே தெரியாதா...?
அப்புறம் ஏன் போராட வந்திய தம்பி...?

"கொள்கைத் தெளிவில்லாத மாணவர் இவர்"
போராட்ட மாணவர்கள் எங்களுக்கு
கொள்கைவாதிகள் நீங்கள் அளித்த பட்டம்.

சத்தியமா சொல்றேன்,
நான் மார்க்ஸின் மாணவன் அல்ல;
நான் பெரியாரின் பேரனும் அல்ல;
நான் அம்பேத்காரின் வாரிசும் அல்ல;
நான் காமராசரின் வாரிசும் அல்ல;
நான் பெருஞ்சித்திரனாரின் பக்தனும் அல்ல...
நான் ஒரு மாணவன்.
கொள்கை தெரியாத என் வயது 20.
என்னைப் போராட வைத்தவன் வயது 15 கூட இருக்காது,
அவன் தான் தம்பி பாலச்சந்திரன்.

கொஞ்சம் அடங்காத் திமிரோடு
தொடர்ந்து எழுதுகிறேன்.....
மார்க்சியத்தில் ஊறி, பெரியாரியத்தில் வளர்ந்து,
தமிழ்த்தேசியத்தின் வாரிசுகளான நீங்கள்
உருவாக்காத புரட்சியை
மாணவர்கள் உருவாக்கி உள்ளோம்.

நீங்கள் பேசுங்கள்,பேசுங்கள்,பேசுங்கள்...
கேட்கத் தயாராக இருக்கிறோம் கொள்கைகளை,
துடிக்கிறோம் மானமுள்ள தமிழ்ப் பிள்ளைகளாக மாற நாங்களும்
ஆனால் நீங்கள் எங்களை
ஒதுக்குகிறீர்கள்;
ஓரங்கட்டுகிறீர்கள்;
புறக்கணிக்கிறீர்கள்;
குறை கூறுகிறீர்கள்;
குற்றஞ் சாட்டுகிறீர்கள்...

ம்ம்ம்ம்
முப்பது கோடியாம்!!!!
முன்னூறு கோடியாம்!!!!
நாங்கள் பதில் பேச எவ்வளவு நேரமாகும்?

.
.
.
.

உங்கள் இயக்கத்தை கைப்பற்றி விடுவோமா? இல்லை..,
உங்கள் கட்சியை கலைத்து விடுவோமோ? இல்லை..,
நாங்கள் ஆட்சியைப் பிடிக்கத் துடியாய் துடிக்கிறோமா?
இல்லையே.

மாணவர்கள் நாங்கள்
போராட்டத்தின் செல்லக் குழந்தைகள்.
உங்கள் கையைப் பிடித்து நடக்கவே ஆசைப்படுகிறோம்;
உங்கள் இயக்கத்தையும், கட்சியையும் ஒரு ஓரமாக
வைத்து விட்டு வாருங்கள்!
முடிந்தால், விருப்பமிருந்தால்
கையைப் பிடித்து தூக்கி விடுங்கள்.
இல்லையேல் ஒதுங்கிக் கொள்ளுங்கள்,
நாங்களே கற்றுக் கொள்கிறோம்
நாங்கள் போராடுவோம்
நாங்கள் வென்றெடுப்போம்
இது சத்தியம்.

படிப்பதற்காகவும் போராடுகிறோம்
போராடுவதற்காகவும் படிக்கிறோம்.

- மாணவர் ஜோ பிரிட்டோ (https://www.facebook.com/pgjoebritto)