அரசனும் அல்லன் அமைச்சனும் அல்லன்
நிரந்தரப் பணிசெயும் ஊழியன் அல்லன்
உற்பத்தி விநியோக முறைகள் தன்னில்
அற்புத மாகச் சுரண்டல் விதிகளை
உடலில் உயிர்போல் பின்னி வைக்கும்
கொடுமைச் சமூக அமைப்பே எதிரி
என்றே விளக்கி மக்கள் மனதில்
நன்றாய்ப் புரட்சி எண்ணம் வளர்த்த
மார்க்சிம் கோர்க்கியைப் போல யானோ
பார்புகழ் இலக்கியம் படைத்திட வல்லேன்
இருப்பினும் உலகில் சமதர்மம் மலர
ஒருமை மனதுடன் படைத்திடு பவற்றை
ஏற்றிட வேண்டி விழைகின் றேனே
(உற்பத்தி விநியோக முறைகளில் சுரண்டல் விதிகளை, உடலில் உயிர் போல அற்புதமாகப் பின்னி வைத்து இருக்கும் சமூக அமைப்பு தான் எதிரியே யொழிய, அரசர்கள், அமைச்சர்கள், நிரந்தரமாகப் பணி புரியும் அரசு ஊழியர்கள் ஆகிய தனிப்பட்ட மனிதர்கள் அல்லர் என்று விளக்கி, மக்கள் மனதில் புரட்சி எண்ணத்தை நன்றாக வளர்த்த மார்க்சிம் கோர்க்கியைப் போல, நான் உலகப் புகழ் இலக்கியங்களை படைக்கும் திறன் உடையவன் அல்லன். இருந்தாலும் உலகில் சோஷலிசம் மலர வேண்டும் என்பதற்காக ஒருமுகப்பட்ட மனதுடன் படைத்திடும் இலக்கியங்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.)
- இராமியா