இலவச அரிசியும் குடிகெடு மதுவும்
உலர்மதி யுடனே ஏற்றிடும் பண்புடன்
உழுதநோன் பகடு அழிபெற் றாங்கு
பழுதைப் பெற்று விழுமிய பலனைப்
பார்ப்பனர் தழைக்கவும் முதலிகள் வாழவும்
இரையாய்க் கொடுத்திடும் தமிழ்க்குடி மகனே
நின்புகழ் நினைக்கப் புல்லரிக் கின்றதே
(இலவச அரிசியையும், குடியைக் கெடுக்கின்ற மதுவையும், அறிவு உலர்ந்து ஏற்றுக் கொள்ளும் பண்புடன், உழுது பாடுபட்ட மாடு (நெல்லைத் தன் உடைமையாளனுக்குக் கொடுத்து விட்டு) வைக்கோலைத் தான் உண்டு வாழ்வது போல, உழைப்பின் விழுமிய பலன்களை எல்லாம் பார்ப்பனர்கள் தழைக்கவும், முதலாளிகள் வாழவும், இரையாய்க் கொடுத்து விட்டு மீதியாய் உள்ள சக்கைகளை மட்டும் பெற்று உயிர் வாழும் தமிழ்க் குடிமகனே! உன் புகழை நினைக்கையில் புல்லரிக்கின்றதே.)
- இராமியா