முல்லையும் குறிஞ்சியும்
முறைமையிற் திரிந்ததால்
நாங்கள்
பாலை நோக்கிப் பயணிக்கின்றோம்
எல்லையில்லா நெய்தலும்
எங்களுக்குக் கொள்ளையாய் மாறிவிட்டது
வலைவீசப் போனவர்களே
மரணவலையில் மாட்டிக்கொண்டோம்
எங்கள் தூண்டிலில்
எங்களையே நாக்குப் பூச்சிகளாய் மாட்டியது
மாறிப்போன எங்களின் எல்லைப் புறங்கள்
மருதங்கள் எங்களை வைத்துச்
சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்க
நாங்கள்
எதிராளிகளின் சவப்பெட்டிகளில்
ஆணிகளாய் அறையப்பட்டோம்
அலைகின்ற அலைகளில்
எங்கள் சடலங்கள் கரையொதுங்க
ஊரே ஒன்று கூடி
ஒருத்திக்கு ஒப்பாரி வைக்கும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
எங்கள் உரிப்பொருள் ஆனதால்
இரங்கல் கூட்டத்திலேயே கழிந்து போகிறது
எங்கள் வாழ்க்கை
மகுடங்களுக்குத் தலைசாய்க்கும் செவிகள்
எங்கள் மரண ஓலங்களில் மட்டும்
செவிடாகி விடுகின்றன
சாவுகளின் எண்ணிக்கையில்
கோழைகள் சரித்திரம் சொல்ல
சந்ததியின் முகம் காண
சடலங்கள் கரையொதுங்க
எங்களின் ஆன்மா மட்டும்
ஏதோ ஒரு போராளியின் வயிற்றில்...
- அமுதபாரதி