(தோழர் - இரகுவின் நினைவாக)
நக்சல்பாரிகள், புரட்சியாள்கள், கம்யூனிஸ்டுகள் என
அறியப்படுகிற நாங்கள்
அறிவிக்கப்படாத ஒரு போரினை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்
என்னதான் நாங்கள் எதிரி வர்க்கம் வர்க்கப் போராட்டம்
என்று திட்டங்கள் தீட்டினாலும்
எங்களது உடனடி இலக்கு எதிரிகளல்ல
பலவாறாய் பிரிந்து கிடக்கிற எங்களுக்குள்ளே
யார் புனிதப் புரட்சியாளர்கள் என்பதுதான்
எங்களது உடனடிச் சிக்கல்
தீர்க்க முடியாத இந்த தீவிர முரண்பாட்டுக்குள் சிக்கி
எங்களுக்குள் நாங்களே பகைத்துக் கொண்டு
ஒருவர் பின் ஒருவராக செத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆதலால் எதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறான்
அவனுக்கு எந்த இழப்புமில்லை.
அரைக் காசுப் பொருட் செலவுமில்லை
அவன் போர் செய்ய வேண்டியதுமில்லை
வேண்டிய அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு
அறையில் இருந்தபடியே கணக்குத் தீர்த்துக் கொள்கிறான்.
அவனுக்காக எங்களது அலைபேசிகள் பேசுகின்றன
அவனது இருக்கைகளில்தான் எங்களது ஆலோசனைகள் நடக்கின்றன
அவனது ஒற்றர்களும் உடனிருக்கவே திட்டமிடுகிறோம்
அவனுக்கு எங்களை நாங்களே காட்டிக் கொள்ளும்
அடையாள அணிவகுப்புதான் நிகழ்ச்சிகள் அனைத்தும்
அவனின்றி அணுவும் அசையாது
இப்போது எதிரியும் நாங்களும் ஓரணியில்
நண்பர்கள் நாங்கள் எதிர் எதிரணியில்
எதிரியின் போரை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்
எதிரி எங்களுடனே இருப்பதாலே
எங்கள் தலைமைகள் பறி போகின்றன.
கைதுகளும் காவுகளும் எளிதாய் நடக்கின்றன.
எங்களுக்குள் நாங்களே பகைத்துக் கொண்டு
ஒருவர் பின் ஒருவராக செத்துக் கொண்டிருக்கிறோம்
எதிரி சேதாரமில்லமால் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
- திருப்பூர் குணா