கீற்றில் தேட...

நட்சத்திரங்களின்
ஒளிச்சொற்களால்
பூக்களின் இதழ்களில்
காற்றின் பாடல்களுக்கு
கையொப்பம் இட வந்தவன்

என்னை
கணிதப்பாடத்தை
மனனம் செய்யச்சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்..!

கொட்டும் அருவிகளின்
வற்றாத ஜீவநதிகளின்
அடர்ந்த காட்டின்
பேரமைதியில்..
தனித்திருக்க வந்த
இயற்கையின்
யாசகன் நான்..!

என்னை
செல்வந்தர்களிடம்
கையேந்தி நிற்கச் சொல்லி
காயப்படுத்தாதீர்கள்..!

ஒரு பறவையைப் போல
பூமியை தரிசிக்க வந்த
யாத்ரீகன் நான்..!

குடும்பம், சாதி, மதம்
ஆகிய கூண்டுகளில்
சிறைப்பிடிக்க வேண்டி
என் சிறகுகளை
வெட்டி விடாதீர்கள்..!

என் வண்ணங்கள்
பிடிக்கவில்லை என்றால்
விலகிச் செல்லுங்கள்..!

உங்களின் சாயத்தை..
என் மீது பூசிச் செல்லாதீர்கள்..!
பெருமழைக் காத்திருக்கிறது
வண்ணங்கள் கலைந்திடும்
வாழ்க்கை ஒரு வானவில்..!

பூட்டி வைத்த..
ஆபரணங்களுக்காக
நீங்கள் விழித்திருங்கள்..!

ஒரு நாடோடியின்
இரசனை மிகுந்த
இராத்திரியைப் போல
மிஞ்சியிருக்கும்
இந்த வாழ்க்கை
எனக்குப் போதும்..!

மரணத்தின் வாழ்வை
தினமும் வாழ்பவன்..!
வாழ்வின் மரணத்தை
என் மீது
திணித்து விடாதீர்கள்..!

பயணிக்காத
கப்பலின் பாதுகாப்பு
எனக்கு வேண்டாம்..!
ஒரு புயலைக்
கடந்து செல்லும்
ஒரு கட்டு மரம் போல்
வாழ்வேன்..!

வேதங்களின்..
மந்திரச்சொற்களால்
சிறைவைக்கப்பட்ட
உங்கள் இறைவன்
எனக்கு வேண்டாம்..!

தாய்மையின் சிறகுகளாய்
கைகள் விரித்து
காத்திருக்கும்
காலத்தின் மடியில்
சரணடைவேன்..!

சுவடுகள்
ஏதுமின்றிக் கரையும்
ஒரு நொடி போதும்..!
கடலிற்குள்
காணாமல் போகும்
நதியாவேன்..!