தீர்மானித்து விட்டதாக சொல்லியபடி
உதடுகளை இறுக மூடிக்கொள்கிறாய்
வேறெந்த வார்த்தைகளும் சொல்லுவதற்கில்லை என்பதாக
எப்படி உன்னால் அப்படியொரு முடிவை எடுக்க முடிகிறது
ஓர் அறிமுகமெனவும்
ஓர் அரவணைப்பாகவும்
படிநிலை வளர்தலில் ஒத்துழைப்பென தேவைப்பட்ட இணக்கம்
எந்த நொடியை இழந்ததில் கைநழுவி உடைந்தது
ஓர் அபத்த மேஜையில் சிரமேற்கொண்டு செதுக்கி வைக்கிறாய்
கட்டுப்பாடுகள் நிறைந்த உரையாடலுக்குரிய வெளியை
அதன் மேற்பரப்பில் நிகழ்த்திவிட துடிக்கிறாய்
உனக்கு உடனே வெளியேறிவிட வேண்டும்
ஒரு வாக்கியத்திலிருந்து
வேறொரு புத்தகத்துக்குள் நுழையும் முன்
சிகரத்திலிருந்து பாதாளத்துக்கு சரிந்தாக வேண்டும்
தீர்மானித்துவிட்டதாக இறுகும் உதடுகள் உலர்ந்து போவதை
உனக்குச் சுட்டிக்காட்ட ப்ரியப்படுகிறேன்
ஆனாலும்
உன்னால் அப்படியொரு முடிவுக்கு வர முடிகிறது
அடங்குதலின் நுழைவாயிலில் நின்று உன் சிறகை மெல்லக் கோதியபடி..
- இளங்கோ (