இயற்கைச் செல்வம் அனைத்தையும் மக்கள்
பயன்பெற விழையும் வினைஞர் ஆட்சியில்
அடர்ந்த காடாம் சைபீரியாவில்
கெடலின்றி வளர்ந்த விலங்கையும் மரத்தையும்
எண்ணி வைத்தனர் கருவூலக் கணக்கில்
பண்பிலாச் சந்தை ஆட்சி அமைத்தபின்
காட்டினைக் காக்கும் ஆட்கள் தம்மை
நாட்கள் தோறும் இலாப நோக்கில்
குறைத்த நிலையில் பணியின் தரமும்
மறைந்து நெருப்புப் பொறியால் காடும்
எரிந்த தாலே மாண்ட விலங்கையும்
கரியாய்ப் போன மரங்கள் தம்மையும்
எண்ணும் இழிநிலை அறியும் போது
கண்ணும் கலங்கி நெஞ்சும் கொதிக்குதே
(இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் (மூலதனத்திற்கு அடிமையாக இராமல்) மக்களுக்கே பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த சோஷலிச ஆட்சியில், அடர்ந்த காடாகிய சைபீரியாவில் கெடுதல் (அதாவது அபாயங்கள்) எதுவும் இல்லாமல் (செழித்து) வளர்ந்த விலங்குகளின் கணக்கையும் மரங்களின் கணக்கையும் எண்ணிக் கருவூலக் கணக்கில் வைத்துக் கொண்டு இருந்தனர். (ஆனால்) நல்ல பண்பு இல்லாத சந்தை முறைமை ஆட்சி அமைத்த பின்னால், இலாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு நாட்கள் தோறும் காடுகளைப் பராமரிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டே வந்ததால் பராமரிப்பின் தரம் மறைந்து விட்டது. அதனால் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க முடியாமல், காட்டு நெருப்பில் (காட்டு வாழ்) விலங்கினங்களும் மரங்களும் எரிந்து போயின. அப்படி எரிந்து போன விலங்குகளையும் கரியாகிப் போன மரங்களையும் இப்பொழுது எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற இழிநிலையை அறியும் போது கண்கள் கலங்கி நெஞ்சு கொதிக்கின்றதே.)
- இராமியா