கீற்றில் தேட...

இங்கே பொழியும் மழை
போதுமானதாக இருக்கிறது
உன்னை நினைவுபடுத்த
உன் பிரியத்தின் கதகதப்பை
எண்ணித் தவிக்க
உன் பேரன்பின் ஒளிச்சுடரை
நினைத்துருக
எல்லைகள் இல்லா
உன் பெருங்கருணை என
இங்கே பொழியும் மழை
போதுமானதாக இருக்கிறது

யாரோ ஒருத்தியின் கையிடுக்கில்
எச்சிலொழுக சிரிக்கும் குழந்தை
போதுமானதாக இருக்கிறது
மெல்லிய உன் குரலை
நான் நினைத்துக் கொள்ள
உன் நிசப்தக் கவிதைகைளில்
சஞ்சரிக்க
உன் வாத்சல்யமான அன்பை
நுகர்ந்திழுக்க
உன் கவிதையில் ஊறும் மௌனத்தை போல
யாரோ ஒருத்தியின் கையிடுக்கில்
மென்கீற்றாய் சிரிக்கும் குழந்தை
போதுமானதாக இருக்கிறது

கிளையிலிருந்து உதிரும் இலை
போதுமானதாக இருக்கிறது
உன்னைப் பார்த்து வெகுநாள் ஆன
ரணத்தை ஆழப் படுத்த
உன்னோடு இம்மழை நாளில்
தேநீரோடு கவிதை பேசமுடியா
இயலாமையை நொந்துகொள்ள
எனக்கே எனக்கென நீ
இசைக்கும் குறிப்புகளை
இழந்துடையும் இதயத்தை
இன்னும் இன்னும் சிதறடிக்க
அன்றொரு நாள்
என் சொல் பொருட்டு
நீ உதிர்த்த கண்ணீர்த்துளி போல்
கிளையிலிருந்து கிளம்பும் இலை
போதுமானதாக இருக்கிறது

- க.உதயகுமார்