கீற்றில் தேட...

சொல்லாமல்
ஊருக்கு சென்று விட்ட
செல்ல மகளிடம்
கோபித்துக் கொண்டு
அன்ன ஆகாரமின்றிக் கிடக்கின்றன
அவளின் பொம்மைகள்..!

கட்டிலுக்கு அடியில்
ஒளிந்து கொண்டு
வெளிவர மறுக்கின்றன
அவள் விளையாடிய பந்துகள்..!

சுழலும் மின்விசிறி தாண்டி
வீட்டிற்குள் வந்து செல்கின்றன
அவள் சிநேகம் வளர்த்த
சிட்டுக்குருவிகள்..!

அவளின் மென்விரல்களின்
தீண்டலை எதிர்பார்த்து
வீட்டுத் தோட்டத்தில் வந்து
அமர்ந்து செல்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்..!

இருளைத் திருடிய காக்கைகள்
அவளின் விழிகளுக்கு
தன் கருமையை
ஒப்படைப்பதற்காக
காத்துக் கிடக்கின்றன..!

அஃறிணைகளோடு
அன்றாடம் உறவாடி
உயர்திணையாக்கி விட்ட
அவளின் பேரன்பிற்காக
காத்திருக்கின்றன
உயிரற்ற திண்ணைகள்..!