தீவட்டிகள் திசையெங்கும் ஜொலிக்க
மந்திர உச்சாடனங்கள் மங்கலமாய் ஒலிக்க
அலங்கார யானையும் ஒட்டகமும் முன் நடக்க
தீப தூபங்கள் திவ்யமாய் சிறக்க
பெரியரத வீதியில்
துவங்கிவிட்டது சாமிப்புறப்பாடு........
பழஞ்சட்டை தொப்பலாய் நனைய
நெற்றிவியர்வை நிலத்தில் தெறிக்க
நாபிக்கமலத்தின் காற்றை இழுத்து
நாலாதிசையிலும் இசை பரப்பியபடி
கொட்டுக் காரனுக்கு நடுவே நடக்கிறான் கொம்பூதி
ஆயிரம்பொன் சப்பரத்தில் அமர்த்தப்பட்ட
வியர்வை சுரப்பியற்ற விக்ரகத்திற்கு
சலிக்காமல் வீசப்படுகிறது வெண்சாமரம்!